இயற்கை விரும்பிகளின் சொர்க்கம், ஏழாவது சொர்க்கம்
""இயற்கை விரும்பிகளின் சொர்க்கம், ஏழாவது சொர்க்கம் (அதீத மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய இடத்தை இப்படி அழைப்பர்) எனப் புகழப்படும் சுற்றுச் சூழல் சிறிதும் மாசுபடாத தேயிலை நகரான வால்பாறையைச் சுற்றிலும் உள்ள அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாத் தலங்கள் வெளி உலகுக்கு அறிமுகமாகாமல் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதி வால்பாறை. இதன் வரலாற்றுப் பின்னணி 1846-ல் துவங்குகிறது. ராமசாமி முதலியார் என்பவர்தான் வால்பாறையில் முதன் முதலில் காபியைப் பயிரிட்டவர்.
அதன்பின் 1864-ல் கர்நாடிக் காபி கம்பெனி அப்போதைய சென்னை அரசிடம் விவசாயத்துக்கு நிலம் தருமாறு கேட்டது. அரசும் ஏக்கர் ரூ.5 வீதம் விற்பனை செய்தது. சிலர் இதில் காபி பயிரிட்டனர். ஆனால் எதிர்பார்த்த சாகுபடி இல்லாததால் வாங்கிய நிலத்தைச் சிறிது சிறிதாக விற்பனை செய்தது அந்நிறுவனம்.
இதன்பின் 1875-ல் இங்கிலாந்து இளவரசர் 7-ம் எட்வர்டு வால்பாறை அருகே புல்மலைக்கு வேட்டையாட வந்து பொள்ளாச்சி அருகே அங்கலக் குறிச்சியில் தங்கியுள்ளார். ஆனால் என்ன காரணத்தாலோ வேட்டையாடச் செல்லவில்லை.
இதன்பின் பல்வேறு தரப்பினர் தேயிலைச் செடிகளைப் பயிரிடத் துவங்கினர். இப்போது சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைத் தேயிலைதான். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 63 கி.மீ. வரை காட்டுப்பகுதியின் வழியாகத்தான் வால்பாறைக்குச் சென்றாக வேண்டும்.
மலைப்பாதையின் முதலில் ஆழியாறு அணை. அதையடுத்துக் குரங்கு அருவி. மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள். செல்லும் வழியில் சிங்கவால் குரங்கு, கருங்குரங்கு, மலை அணில், யானை, சிறுத்தை, தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடு ஆகியவற்றைக் காணலாம்.
வால்பாறையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் வெளியில் அதிகம் தெரியாததால் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. சுற்றுலாத் துறையின் சார்பில் போதுமான வசதிகளைச் செய்ய வேண்டும். சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் இங்குள்ள அணைகளில் ஏதாவது ஒன்றில் படகு சவாரிக்கு அனுமதிக்க வேண்டும். சுற்றுச் சூழல் பிடித்தாலும் பொழுதுபோக்குக்கு அரசு முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் வால்பாறையையும் பொதுமக்கள் நாடி வரும் தூரம் வெகு தொலைவில் இல்லை'' என்கிறார்.
வால்பாறை அருகே உள்ள முக்கிய இடங்கள்
சோலையார் அணை
ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை. வால்பாறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகான அணை.
நீராறு அணை
பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகத் துவங்கப்பட்ட அணை. வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.
சின்னக்கல்லார் அணை
இந்தியாவிலேயே சிரபுஞ்சிக்கு அடுத்த அதிக மழைப் பொழிவு உள்ள இடம். வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இங்கு அருவியொன்றும் உள்ளது. இந்த அருவியின் சத்தம் சிங்கத்தின் உறுமலைப் போலக் கேட்கும்.
அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி
புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சி கேரளத்தில் உள்ளது. வால்பாறையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. வனப்பகுதியின் நடுவில் செல்லும்போது பல்வேறு வனவிலங்குகளையும் காணமுடியும்.
புல்மலை
ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை விரும்பிகளின் சொர்க்கம் புல்மலை. உலகின் வேறு இடங்களில் காணமுடியாத இந்த இயற்கைத் தாயைக் காண ஒவ்வோராண்டும் வெளிநாட்டவர் பலர் வந்து செல்கின்றனர். ஓங்கி உயர்ந்த மலை, அடுத்த பக்கம் அதல பாதாளம், பச்சைப் புல்லை விரித்தாற்போன்ற புல் மலை. இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இப்பகுதியில்தான் தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.
குரங்கு அருவி: பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள குரங்கு அருவியில் குளித்துச் செல்வதற்கு ஒவ்வோராண்டும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். வால்பாறையைச் சுற்றிலும் 8 அணைகள் உள்ளன. வால்பாறையின் மீதான பார்வை பலருக்கும் படவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்காத நிலை உள்ளது.
ஆழியார் அணை
அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட அழகிய அணை ஆழியார் அணை. பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது.
1959 முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது, அணைக்கு முதன்மையான நோக்கம் வேளாண்மை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கு பாசனத்திற்கு ஆதரதிற்கும் ஆகும். அணை உயரம் 81 மீட்டர். அணையின் கீழே ஒரு நன்கு பராமரிக்கப்படும் பூங்கா உள்ளது. நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள அனமலை கண்களுக்கு ஒரு விருந்து, படகு சவாரி இங்கே இருக்கிறது.
இது பொள்ளாச்சியிலிருந்து சாலைவழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வால்பாறை பார்வையிடும் பெரும்பாலான மக்கள் ஆழியார் அணைக்கு பயணம் செய்கிறார்கள்.
0 Comments